ஈரானின் பாதுகாப்புத் தலைவர் லாரிஜானி மற்றும் பசிஜ் தளபதியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு


ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் உள்நாட்டு பசிஜ் போராளிக் குழுவின் தளபதி குலாம்ரெசா சுலைமானி ஆகியோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது. ஆனால், இதுவரை ஈரான் தரப்பில் இருந்து எந்த உறுதிப்படுத்தலோ மறுப்போ இல்லை.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்  காட்ஸ், லாரிஜானியின் மரணம் குறித்து செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதற்கிடையில், லாரிஜானி கையால் எழுதிய ஒரு குறிப்பை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன. இருப்பினும், அது அந்த மூத்த அதிகாரியின் உயிருக்கான ஆதாரமாக எழுதப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

சர்வதேச கடல் பகுதியில் தங்களது கடற்படைக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 84 ஈரானிய மாலுமிகளை லாரிஜானி தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட அந்தக் குறிப்பு நினைவுகூர்கிறது. 

இவர்களது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது மரணம் உறுதி செய்யப்பட்டால், பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் போரைத் தொடங்கிய முதல் நாளிலேயே முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரைக் கொன்றதற்குப் பிறகு, இந்தப் போரில் நிகழும் மிக உயர்ந்த மட்டத்திலான படுகொலையாக லாரிஜானி இருப்பார்.

No comments